X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இந்தியா வெற்றி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன.

அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் (16 ரன்) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூ.க்கு இரையானார். தொடர்ந்து லோகேஷ் ராகுல் 38 ரன்னிலும், புஜாரா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரஹானேவும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். 17 ரன்னில் இருந்த போது கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ரஹானே 48 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி இருக்க வேண்டியது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தாததால் ரஹானே தப்பிபிழைத்தார். நிதானமாக ஆடிய இருவரும் தங்களது அரைசதத்தை கடந்தனர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். வந்த வேகத்திலேயே கேப்டன் விராட் கோலி (51 ரன்) பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து ரஹானேவுடன், ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்கள் சேகரித்ததுடன், முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வலுவான நிலையை நோக்கி பயணித்தது. அபாரமாக ஆடிய ரஹானே தனது 10-வது சதத்தை எட்டினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ரஹானே 102 ரன்னில் கேட்ச் ஆனார். 7 ரன்னில் கன்னி சதத்தை நழுவ விட்ட விஹாரி 93 ரன்களில் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். ரிஷாப் பண்ட் 7 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய பிராத் வெயிட் 1 ரன்னும், ஜான் சேப்பல் 7 ரன்னும் எடுத்து பும்ரா பந்து வீச்சில் நடையை கட்டினர். இதைத்தொடர்ந்து பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணியில் அடுத்து களமிறங்கிய புரூக்ஸ் 2 ரன்னும், ஹெட்மயர் 1 ரன்னும், டேரன் பிராவோ 2 ரன்னும், ஷாய் ஹோப் 2 ரன்னும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னும் எடுத்து மளமள வென தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள் வெளியேறினர். இதைதொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 12 ரன்களும், கேப்ரியல் ரன் ஏதும் எடுக்காமலும் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேமர் ரோச் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் கேமர் ரோச் அதிரடி காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் ஒரளவு உயர்ந்தநிலையில் கேமர் ரோச் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 19 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அபாராமாக பந்து வீசிய பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்படி இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

Tags: sports news