வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள்

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அஸ்வின், கடந்த வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் தொடர்நாயகன் விருது பெற்றவர் என்பது நினைவு கூரத்தக்கது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடிய அணி அப்படியே களம் இறங்குவதாக கோலி அறிவித்தார். இதன்படி ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷமார் புரூக்ஸ் சேர்க்கப்பட்டார். அந்த அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகித்தனர்.

மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனது. வெஸ்ட் இண்டீசின் புயல்வேக தாக்குதலில் இந்திய வீரர்கள் வெகுவாக தடுமாறினர். மயங்க் அகர்வாலும் (5 ரன்), அடுத்து வந்த ‘தூண்’ புஜாராவும் (2 ரன்) ஒரே மாதிரி கெமார் ரோச்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் ஆனார்கள். பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய புஜாரா, முக்கியமான இந்த டெஸ்டில் சோபிக்க தவறி விட்டார்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் தாக்குப்பிடிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியலின் பந்து வீச்சில் முழங்கையில் அடிவாங்கிய விராட் கோலி (9 ரன், 12 பந்து, 2 பவுண்டரி) அதே ஓவரில் அவர் ஷாட்பிட்ச்சாக வீசிய அடுத்த பந்தை தேவையில்லாமல் தட்டிவிட்டு ‘கல்லி’ திசையில் நின்ற புரூக்சிடம் பிடிபட்டார். அப்போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 25 ரன்களுடன் (7.5 ஓவர்) தள்ளாடியது.

இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன், துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானத்தை கடைபிடித்தனர். 21 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டத்தின் 34.2வது ஓவரில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஜ் பந்தில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பந்த், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.

இருவரும் இணைந்து இந்திய அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய நிலையில் ஆட்டத்தின் 59.4 ஓவரில் துணை கேப்டன் ரஹானே 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்ரியல் பந்து வீச்சில் அவுட்டானார். அடுத்து வந்து களம் இறங்கிய ஜடேஜா 3 ரன்களுடனும், ரிஷப் பந்த் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இதன் மூலம் 68.5 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோச் 3 விக்கெட்களையும், கேப்ரியல் 2 விக்கெட்களையும், ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்களையும் எடுத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news