வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் பர்ட்லெட் பந்து வீச்சில் வெஸ்ட்இண்டீஸ் திணறியது. அவரது பந்தில் அத்தானாஸ் (5 ரன்), கிரீவ்ஸ் (1), கேப்டன் ஷாய்ஹோப் (12) ஹாட்ஜ் (11), ஆகியோர் அவுட் ஆனார்கள். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 59 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.
இதனையடுத்து ரோஸ்டன் சேஸ்- கீசி கார்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். இருவரும் அரை சதம் விளாசினார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. ரோஸ்டன் சேஸ் 59 ரன்னிலும் கீசி கார்டி 88 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் 4 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய இங்கிலிஸ் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித்- க்ரீன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 4-ந் தேதி நடக்கிறது.