Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 வது டி20 போட்டி – இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் – சால்ட் களமிறங்கினர். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தது. ஜாஸ் பட்லர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய சால்ட் 119 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 4 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசல் மட்டுமே அரை சதம் அடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 20டி போட்டி நாளை நடைபெறுகிறது.