Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.அடுத்து களம் இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த நிகோலஸ் பூரன் 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்கள் என்ற வலுவான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுப்மான் கில் 43 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 63 ரன்கள் குவித்தார். சூரியகுமார் யாதவ் 9 ரன்னுக்கு அவுட்டானார். சஞ்சு சாம்சன் 54 ரன்கள் அடித்தார். ஹூடா 33 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ஒருபுறம் இந்திய விக்கெட்கள் சரிந்த போதிலும் அதிரடி காட்டிய அக்சர் படேல் 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அக்‌ஷர் பட்டேல் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இந்திய அணி 49.4 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 2-வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.