இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் தீபக் சாஹர். 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற சிறந்த பவுலர் ஆவார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த போட்டியின் போது தீபக் சாஹர் காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை.
அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஏலத்தில் மிகப் பெரிய விலைக்கு எடுத்தது. காயத்தில் இருந்து குணமடையாததால் தீபக் சாஹர் சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் ஆடவில்லை. இதே போல் அயர்லாந்து பயணத்திலும் இடம் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் உடல் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.
இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கு தீபக் சாஹர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பாக்கபபடுகிறது. தீபக் சாஹர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும். இதன் முடிவில் தான் அவர் உடல் தகுதியுடன் உள்ளாரா என்று தெரியவரும்.
இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிய பிறகு அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு செல்லும். ஜூலை 22-ந் தேதி முதல் ஆகஸ்ட் 7-ந் தேதி வரை இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்று பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.