வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் தலா 52 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 19 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 33 ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்களான மேயர்ஸ் 9 ரன்களிலும், பிரண்டன் காக் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர், இணைந்த நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் அரை சதம் கடந்து முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

நிகோலஸ் பூரன் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 159. பூரன் வெளியேறியதும் பாவெலுடன் கேப்டன் பொல்லார்டு இணைந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டுவதற்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை. பரபரப்பான சூழ்நிலையில் கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் நேர்த்தியாக வீசினார். முதல் பந்தில் பாவெல் ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை எதிர்கொண்ட பொல்லார்டும் ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் பாவெல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாச, ஆட்டத்தில் பரபரப்பு கூடியது.

ஆனால் 5வது பந்தில் அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி ஆனது. கடைசி பந்தில் பொல்லார்டு 1 ரன் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 178 ரன்களே சேர்த்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாவெல் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. அத்துடன் டி20 தொடரையும் கைப்பற்றி உள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி  நாளை மறுநாள் நடக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools