Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – அயர்லாந்து வெற்றி

அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 11ம் தேதி நடைபெற இருந்த இரண்டாவது போட்டி கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 48 ஓவரில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 147 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், இறுதிக்கட்ட வீரர்கள் ரோமாரியோ ஷெப்பர்டு, ஒடியன் ஸ்மித் பொறுப்புடன் ஆடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களைக் கடந்தது.

அந்த அணியில் ரோமாரியோ ஷெப்பர்டு 50 ரன்னும் ஒடியன் ஸ்மித் 46 ரன்னும், புரூக்ஸ் 43 ரன்னும் எடுத்தனர்.

அயர்லாந்து சார்பில் ஆண்டி மெக்பிரின் 4 விக்கெட், கிரெய்க் யங் 3 விக்கெட்டும், ஜோஷ்வா லிட்டில் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. 32வது ஓவரில் 4 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இதனால் டி.ஆர்.எஸ். முறைப்படி, 36 ஓவரில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில், அயர்லாந்து 32.3 ஓவரில் 168 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹாரி டெக்டார் அரை சதமடித்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.