வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் விரைவில் பெவிலியன் திரும்பினர். இதனால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறியது.
அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
அணியின் எண்ணிக்கை 168 ஆக இருந்தபோது பாபர் அசாம் 75 ரன்னில் அவுட்டானார். பவாத் ஆலம் 76 ரன்னில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 74 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 22 ரன்னும், பஹீம் அஷ்ரப் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 2 விக்கெட், சீலஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.