X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

4-வது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் மேத்யூ வடே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 53 ரன்களும், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 44 பந்தில் 75 ரன்களும் விளாசினர். இதனால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் லென்டில் சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ரன்கள் குவித்தார். எவின் லீவிஸ் 14 பந்தில் 31 ரன்கள் விளாசினார். கெய்ல் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த்ரே ரஸல், பேஃபியன் ஆலன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸல் ஒரு சிக்ஸ், ஆலன் 3 சிக்ஸ் விளாசினர். ஆனால் கடைசி பந்தில் ஆலன் ஆட்டமிழந்தார். என்றாலும் 25 ரன்கள் இந்த ஓவரில் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

மிட்செல் ஸ்டார்க் கடைசி ஓவரை வீசினார். அந்த்ரே ரஸல் முதல் நான்கு பந்துகளை சந்தித்தார். அதில் ஒரு ரன் கூட அவரால் அடிக்க முடியவில்லை. 5-வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் 4 ரன்களும் அடித்தார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால், ஆஸ்திரேலியா 4 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

75 ரன்களுடன், 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.