Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் (251 ரன்) அடித்து முத்திரை பதித்தார். தொடக்க வீரர் லாதம் 86 ரன் எடுத்தார்.

அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து அணியினரின் அபாரமான பந்துவீச்சில் சிக்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 60 ஓவரில் 138 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் அந்த அணி பாலோஆன் ஆனது.

நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 4 விக்கெட்டும், ஜேமிசன், வாக்னர் தலா 2 விக்கெட்டும், போல்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

2-வது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் களமிறங்கிய பிளாக்வுட்டும், அல்ஜாரி ஜோசப்பும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அல்ஜாரி ஜோசப் அரை சதமடித்தார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிய பிளாக்வு சதமடித்து அசத்தினார்.

இருவரும் சேர்ந்து 158 ரன்கள் சேர்த்த நிலையில் அல்ஜாரி ஜோசப் 86 ரன்னில் அவுட்டானார். அவர் வெளியேறிய சில நிமிடங்களில் பிளாக்வுட்டும் வெளியேறினார். பிளாக்வுட் 104 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 58.5 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட்டும், ஜேமிசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது கேன் வில்லியம்சுக்கு வழங்கப்பட்டது.

இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.