Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து சார்பில் டொமினிக் சிப்லி, ரோரி பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லி ரன்ஏதும் எடுக்காமலும், கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

மறுபக்கம் விளையாடிய ரோரி பேர்ன்ஸ் அரைசதம் அடித்து 57 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 122 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு ஒல்லி போப் உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜேடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒல்லி போப் மற்றும் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தனர்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 85.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஒல்லி போப் 91 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஒல்லி போப் 91 ரன்னில் வெளியேறி சதத்தை தவறவிட்டார். ஜோஸ் பட்லர் 67 ரன்னில் அவுட்டானார். இறுதியில் அதிரடியாக ஆடி அரை சதமடித்த பிராட் 62 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் குவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல், சேஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் சிக்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆட்டம் தொடங்கியது முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. ஹோல்டர் 24 ரன்னுடனும், டவ்ரிச் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் தலா 2 விக்கெட்டும், ஆர்ச்சர், வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *