வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – இந்தியா தோல்வி
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரிஷப் பந்த் (71), ஷ்ரேயாஸ் அய்யர் (70), கேதர் ஜாதவ் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுனில் அம்ப்ரிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாய் ஹோப் ஒரு பக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹெட்மையர் 50 பந்திலும், ஷாய் ஹோப் 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். 50 பந்தில் அரைசதம் அடித்த ஹெட்மையர் 85 பந்தில் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹெட்மையரின் 5-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த ஹெட்மையர், 106 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷாய் ஹோப் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 47-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஹெட்மையர், ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.