வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர்.

இந்த ஆட்டத்தின் முதல் சிக்சரை அடித்த ரோகித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார்.

அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மறுபுறம் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் தங்களது அதிரடியை தொடர்ந்ததால் இந்திய அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது.
கே.எல்.ராகுல் 56 பந்தில் 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

இந்திய அணியினரின் துல்லிய பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 17 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

அடுத்து இறங்கிய ஹெட்மையரும், கேப்டன் பொல்லார்டும் சற்று நேரம் நிலைத்து ஆடினர். இருவரும் இணைந்து 74 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில் ஹெட்மையர் 41 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொல்லார்டு சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரி என 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பொல்லார்டு அவுட்டானதும் இந்தியாவின் வெற்றி உறுதியானது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்று அசத்தியது இந்தியா.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news