X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்தியா கைப்பற்றியது

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. விகாரி 111 ரன்னும், கேப்டன் விராட்கோலி 76 ரன்னும் எடுத்தனர். ஹோல்டர் 5 விக்கெட்டும், கார்ன்வால் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி மேலும் 30 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது.

ஹெட்மயர் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். பும்ரா ஹாட்ரிக் சாதனையுடன் 27 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ‌ஷமிக்கு 2 விக்கெட்டும், ஜடேஜாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

299 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.

57 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறியது. அகர்வால் 4 ரன்னிலும், ராகுல் 6 ரன்னிலும், விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ரோச் பந்தில் வெளியேறினார்கள். புஜாரா 27 ரன்னில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டான ரகானே – விகாரி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. விகாரி 67 பந்தில் 8 பவுண்டரியுடன் 50 ரன்னையும், ரகானே 91 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னையும் தொட்டனர்.

ரகானே 19-வது அரை சதத்தையும், விகாரி 3-வது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.

இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து இருந்த போது ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு 468 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ரகானே 109 பந்தில் 64 ரன்னும், (8 பவுண்டரி, 1 சிக்சர்), விகாரி 76 பந்தில் 53 ரன்னும் (8பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும் ஹோல்டர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

468 ரன் இலக்குடன் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 37 ரன் எடுப்பதற்குள் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர். பிராத்வெயிட் 3 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும், கேம்ப்பெல் 16 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் களம் இறங்கிய ப்ராவோ, ப்ரோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்தனர். இந்த ஜோடி ப்ராவோ 23 ரன்களிலும், ப்ரோக்ஸ் அரை சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 27.5வது ஓவரில் ரோஸ்டன் சேஸ் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து விளையாடிய ஹெட்மயர் (1), ப்ளாக்வுட் (38), ஜாசன் ஹோல்டர் (39), ஹெமில்டன் (0), கார்ன்வால் (1), கெமார் ரோச் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தனர். இறுதியில் கேபிரியேல் களத்தில் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்களையும், சர்மா 2 விக்கெட்களையும், பும்ரா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது தொடரில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த டெஸ்டிலும் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியா ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் 120 புள்ளிகளை பெற்றது.

Tags: sports news