Tamilசெய்திகள்

வெள்ள நிவாரண பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிடுகிறார்.

தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.