X

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5000 கோடி வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் – சித்தராமையா அறிவிப்பு

வெள்ள நிவாரண பணிகளில் கர்நாடக அரசும், மத்திய அரசும் சரியாக ஈடுபடவில்லை என்று கூறி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மூத்த தலைவர்களான எச்.கே.பட்டீல், டி.கே.சிவக்குமார், ஜமீர் அகமது கான், உக்கரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் பதாகைகள் வைத்திருந்தனர்.

போராட்டத்தில் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து 25 எம்.பி.க்களை தேர்வு செய்தனர். தற்போது வரலாறு காணாத வகையில் மாநிலத்தில் 22 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 7 மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இருப்பினும் மழை மற்றும் வெள்ளம், வறட்சிக்கான நிவாரண பணிகளுக்கான நிதியை மத்திய அரசு இதுவரை ஒதுக்காமல் பாரபட்சமாக செயல்படுகிறது. இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநில மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். வெள்ள நிவாரண உதவி செய்ய முடியாத எடியூரப்பா, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாநிலங்களை பார்வையிடுவதற்கு பதில், பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதை தவிர்த்து நரேந்திர மோடிக்கு வேறு ஏதேனும் வேலை உள்ளதா?

மக்களின் பிரச்சினைகளையும், வெள்ள நிவாரண பணிகளையும் எப்படி மேற்கொள்வது என்பதை நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். 2009-ம் ஆண்டு கர்நாடகத்தில் மழை, வெள்ள பாதிப்பை பார்வையிட்ட மன்மோகன்சிங் உடனடியாக ரூ.1,600 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கினார்.

இன்றைய மத்திய மந்திரிகளான அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் மாநிலத்துக்கு வந்து மழை, வெள்ள பாதிப்பை பார்வையிட்டும் பயன் இல்லை. அவர்கள் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. தற்போது வரை வெறும் ரூ.372 கோடி மட்டும் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் மழைக்கு 88 பேர் இறந்தனர். கால்நடைகள் செத்தன. 20 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக மழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து இடைக்கால நிதியாக மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் தலைவர்கள் ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘கர்நாடக வெள்ள பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்’ என்ற அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

Tags: south news