அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர்.
ராணுவத்தால் இசை முழங்க ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வுகள் அமெரிக்க டிவி சேனல்களிலும், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களிலும் நேரடியாக ஒளிரப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் தனது பணிகளை ஜோ பைடன் தொடங்கினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தனது பதவிக் காலத்தின் முதல் அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அறையிலிருந்து ஜோ பைடன் தனது அமைச்சரவை நியமனங்கள் மற்றும் சில பரிந்துரைகளை, துணை அமைச்சரவை அளவிலான பாத்திரங்களுக்கு முறைப்படுத்தினார். பதவியேற்பு தொடர்பான பிரகடனத்திலும் பைடன் கையெழுத்திட்டார்.
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது உள்பட பல நிர்வாக நடவடிக்கைகளில் அவர் பின்னர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.