வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு நிவாரண நிதியாக ரூ.239 கோடி வழங்கும் அமெரிக்கா
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாக பெய்து வரும் மழை காரணமாக நாட்டின் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக பாகிஸ்தானில் இதுவரை பெண்கள், குழந்தைகள் என 1100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் மழையால் பலர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சோகத்தை பாகிஸ்தான் மக்களுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கூடுதலாக ரூ.239 கோடி நிதி உதவி வழங்குகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் உதவியாக இருக்கும். இவ்வாறு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.