வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதீத கன மழை பெய்தது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் சீர்காழி வெள்ளக்காடானது. சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளையும், 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி சென்றார். மேலும் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ. 1000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதிக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்தார். சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட நல்லூர், அகர வட்டாரம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை பிடுங்கி விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் காண்பித்து பாதிப்பு குறித்து கூறினர். தொடர்ந்து சீர்காழி அருகே உப்பநாற்றுக்கரை உடைந்து சூரக்காடு கீழத்தெரு பகுதியில் 350 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு சட்டநாதபுரத்தில் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.