தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை மீட்க வசதியாக டாக்டர் கலாநிதி என்னும் செயலியை தண்டையார்பேட்டையில் உள்ள வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த செயலியை செல்போனில் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வெளிநாட்டு தமிழர்கள் தங்களுடைய தகவலை நேரடியாக தெரிவிக்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் வெளிநாட்டில் இருப்பவர்களுடைய பெயர், பாஸ்போர்ட் எண், வெளிநாடு செல்போன் எண், இந்தியா செல்போன் எண், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்து தகவல் தெரிவிக்கலாம். இந்த விவரங்கள் அனைத்தும் தி.மு.க.அயலக அணி தலைவராக உள்ள வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் நேரடி பார்வைக்கு தெரிவிக்க முடியும்.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களை அரசு சார்பில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்க முடியும். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே சேகர்பாபு, கே.என்.நேரு, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எபினேசர், மாதவரம் சுதர்சனம் பி.கே.சங்கர் ஆர்.டி.சேகர், தாயகம் கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.