வெளிநாட்டு சொகுசு காருக்கான நுழைவு வரி வழக்கு – நடிகர் தனுஷுக்கு நீதிபதி கண்டனம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரி விலக்கு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கு, இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் தனுஷ் ஏற்கனவே 50 சதவீத நுழைவு வரியை செலுத்திவிட்டதாகவும் பாக்கி வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும் எனவே வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
தனுஷ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, சரமாரி கேள்வி எழுப்பியதோடு, மனுதாரர் கட்டவேண்டிய பாக்கி வரித்தொகையை கணக்கிட்டு கூறவேண்டும் என தமிழக வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நடிகர் தனுஷ், செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி ரூ.30.30 லட்சம் என வணிகவரித்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இந்த தொகையை நடிகர் தனுஷ் 48 மணிநேரத்தில் கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.