காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டவும் முயற்சி செய்து வருகிறது.
ஆனால் இந்த நடவடிக்கை இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. இதை பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் தற்போது தங்கள் சொந்த நாட்டினர் மூலம் சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, இது தொடர்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் கட்சி தொண்டர்களை தூண்டி விட்டுள்ளது. கட்சியின் தலைவரும், பிரதமருமான இம்ரான்கான் நேற்றுமுன்தினம், கட்சியின் வெளிநாட்டு செயலாளர் அப்துல்லா ரியாருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும், அடுத்த மாதம் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துமாறும் அப்துல்லா ரியாரிடம் இம்ரான்கான் வலியுறுத்தினார்.
இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு பல நாடுகள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பல நாடுகள் அறிவித்து உள்ளன. ஆனால் அவற்றை இந்தியா ஏற்காதவரை எங்களால் அந்த வாய்ப்புகளை முன்னெடுத்து செல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த தகவலை இந்தியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.