X

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆதார் எண் பெறுவதற்கான கட்டுப்பாடு நீக்கம்

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து 182 நாட்கள் முடிந்த பிறகுதான், ஆதார் எண் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் விண்ணப்பிக்க அனுமதிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, மத்திய அரசு நேற்று அறிவிப்பாணை வெளியிட்டது. அத்துடன், ஆதார் எண் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘உரிய இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம். 182 நாட்கள் காத்திருக்க தேவையில்லை. அவர்களது பாஸ்போர்ட், அடையாள ஆதாரமாகவும், முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்படும். ஒருவேளை, பாஸ்போர்ட்டில் இந்திய முகவரி இல்லாவிட்டால், ஆதார் ஆணையம் அங்கீகரித்த வேறு முகவரி ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்‘‘ என்று கூறப்பட்டுள்ளது.