வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு! – பாராளுமன்றத்தில் எழுந்த கேள்வி
வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. குறிப்பாக குவைத்துக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வெவ்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. உடைமைகள் திருட்டு, பாலியல் தொல்லைகள், ஊதிய குறைவு போன்ற அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்ட பிறகே மீட்பு கிடைக்கிறது.
இதுசம்பந்தமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் எழுப்பினார். அவர், “குவைத்துக்கு வீட்டு வேலை செய்வதற்காக பெண்கள் தேவை என்று செல்போன் செயலி (ஆப்) மூலம் விளம்பரப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி இருந்தால் அது அடிமை வணிகமாகும். இதில் உண்மை உள்ளதா?
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்கு எத்தனை இந்திய பெண்கள் சென்றுள்ளனர்?” என்று கேட்டார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குவைத்துக்கு செல்போன் செயலி மூலமாக வீட்டு வேலைக்கு பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியான தகவலின் அடிப்படையில் குவைத் அரசு உடனடியாக செயல்பட்டு அந்த ஆப் மற்றும் இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் நமது நாட்டு பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதற்கான குடியுரிமைகளையும் அரசு ஒழுங்குபடுத்தி இருக்கிறது.
அதன்படி, இ.சி.ஆர். பாஸ்போர்ட் (எமிகிரேஷன் செக் ரெக்வர்ட் என்ற வகை பாஸ்போர்ட்) மூலமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் செவிலியர்கள் தவிர மற்ற பணியாளர் கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இ.சி.ஆர். பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்றால் இ.சி.ஆர். உடன்பாட்டில் உள்ள 18 நாடுகளும் இந்திய அரசு நடத்தும் நிறுவனங்களின் மூலமாகத்தான் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள ஒருவர் இந்திய பெண்ணை பணி அமர்த்தினால், அந்த பெண் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2,500 அமெரிக்க டாலர் வீதம் காப்புத் தொகையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் செலுத்த வேண்டும்.
வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்களின் அனைத்து விவரங்களும் கொண்ட தகவல் தொகுப்பை உருவாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
ஏனென்றால், அங்கு வேலை செய்யும் பெண்கள் பலரும் இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் (எமிகிரேஷன் செக் நாட் ரெக்வர்ட்’ என்ற வகை பாஸ்போர்ட்) வைத்துள்ளனர். அவர்கள் இந்தியாவில் இருந்து அங்கு செல்லும்போது அனுமதி பெறுவதற்கும், வேலையை பதிவு செய்வதற்கும் அவசியம் ஏற்படுவதில்லை.
அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசால் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் வரை பக்ரைனுக்கு 30 பேரும், குவைத்துக்கு 774 பேரும், ஓமனுக்கு 85 பேரும், கத்தாருக்கு 2 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு 178 பேரும் சென்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.