நியூசிலாந்து – இந்தியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
3-வது போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்தில் இந்தியா களம் இறங்கும். அதேவேளையில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும், அதனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து களம் இறங்கும்.
இந்நிலையில் இந்தியா சொந்த மண்ணில் விளையாடுவதை விட வெளிநாட்டு மண்ணில் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்கள் சிறந்த அணி. அந்த அணியில் உள்ள அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். முதல் போட்டியில் நாங்கள் போட்டியை நெருங்கி வந்தோம். ஆனால், 2-வது போட்டியில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டோம்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே கடினமானதாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். சொந்த மண்ணில் விளையாடுவதுபோல் வெளிநாட்டு மண்ணிலும் சிறந்த அணியாக உருவெடுத்து வருகிறார்கள். இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால், நாங்கள் டாப் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியதை தேவை என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.