X

வெற்றி பெற்ற அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் – 3 வது டெஸ்ட் தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து

பார்டர் கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் அடைந்த மூன்றாவது தோல்வி இதுவாகும். கேப்டனாக ரோகித் சர்மா சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக தோல்வியை தழுவி இருக்கிறார்.

தோல்வி அடைந்ததற்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது:-

முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முதலில் பேட்டிங்கில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் மோசமாக விளையாடினோம். முதல் இன்னிங்சில் அதிக ரன்களை அடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியா எங்களை விட 80, 90 ரன்கள் முன்னிலை பெற்றபோது நாங்கள் மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்.

ஆனால் எங்களால் அதுவும் முடியவில்லை. நாங்கள் வெறும் 75 ரன்கள் தான் இலக்காக நிர்ணயித்திருந்தோம். நாங்கள் முதல் இன்னிங்சில் மட்டும் நன்றாக விளையாடி இருந்தால் ஆட்டத்தின் முடிவு வித்தியாசமாக மாறி இருக்கலாம். இன்னும் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து யோசிக்கவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

தற்போது எங்களுடைய குறிக்கோளெல்லாம் அகமதாபாத் டெஸ்டில் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். நாங்கள் ஒரு அணியாக மீண்டும் இணைந்து என்ன தவறு செய்தோம் என்பதை புரிந்து விளையாட வேண்டும். ஆடுகளத்தை குறை கூறவே கூடாது. ஆடுகளம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நீங்கள் உங்களுடைய பணியை சரியாக வந்து செய்ய வேண்டும். சவாலான ஆடுகளத்தில் விளையாடும் போது நீங்கள் கொஞ்சம் தைரியமாக விளையாட வேண்டும்.

நாங்கள் ஆஸ்திரேலிய வீரர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதி அளித்து விட்டோம். அவர்கள் ஒரே இடத்தில் பந்தை செலுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதற்காக ஆஸ்திரேலியா வீரர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அதுவும் லயான் எங்களுக்கு தொடர்ந்து சரியான லென்தில் பந்து வீசி சவால்களை கொடுத்துக் கொண்டே இருந்தார்.

ஒரு பந்துவீச்சாளர் அப்படி செயல்படும் போது நீங்கள் கொஞ்சம் தைரியமாக விளையாடி இருக்க வேண்டும்.ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்று நாம் பார்க்க வேண்டும்.

ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். எங்கள் அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு கை கொடுக்க வேண்டும். நாம் வகுத்த திட்டத்தை பின்பற்றவில்லை. அதுதான் தற்போது நடந்திருக்கிறது. ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு விளையாடவில்லை.

என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.