Tamilவிளையாட்டு

வெற்றியின் ரகசியத்தை சொல்ல மாட்டேன், அது வியாபார ரகசியம் – சிஎஸ்கே கேப்டன் டோனி

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

மனீஷ்பாண்டே 49 பந்தில் 83 ரன்னும், (7 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் வார்னர் 45 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டும், தீபக் சாஹர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

176 ரன் இலக்குடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடியது.

தொடக்க வீரர் வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாட்சன் 53 பந்தில் 96 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரெய்னா 24 பந்தில் 38 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர்குமார், ரஷீத்கான், சந்தீப்சர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8-வது வெற்றியாகும். இதன்மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளேஆப்’ சுற்றை உறுதி செய்து மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. மேலும் இந்த வெற்றி மூலம் ஐதராபாத்திடம் அதன் சொந்த மண்ணில் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது.

வெற்றி குறித்து சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

தனி நபர்களால் சில ஆட்டங்களில் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது. பல போட்டிகளில் அணியாக வெற்றி பெறுகிறோம். எங்கள் அணியின் மேட்ச் வின்னர் வாட்சன். சில ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவருக்கு ஆதரவு அளிப்பது அவசியமானது. கடந்த ஆண்டு அவர் பல்வேறு ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நிலையாக விளையாடி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைவது குறித்து கேட்கப்படுகிறது. இந்த வெற்றியின் மந்திரத்தை வெளியில் சொல்லக்கூடாது. ஏனென்றால் ஏலத்தில் என்னை வாங்க மாட்டார்கள். அது வியாபார ரகசியம்.

சென்னை அணியின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு, சென்னை அணியின் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதைத் தவிர நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்ல மாட்டேன்.

எனது முதுகுவலி மோசமாக இல்லை. ஆனால் உலக கோப்பை நெருங்குவதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். அச்சப்படும்படி எதுவும் இல்லை. உலககோப்பை தான் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் அணி 5-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர் குமார் கூறும்போது, “175 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் பனி துளியால் ஆடுகளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேற இயலும்” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 26-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

ஐதராபாத் அணி 11-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 27-ந்தேதி சந்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *