வெயிலின் தாக்கத்தை குறைக்க மாட்டு சாணத்தை வகுப்பறையில் பூசிய கல்லூரி முதல்வர்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் வெயிலின் தாக்கத்தை தணிக்க வகுப்பறையில் பசுவின் சாணம் கொண்டு பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஊழியர்களுடன் வகுப்பறை சுவரில் மாட்டுச் சாணத்தை பூசுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் அந்த வீடியோவை கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்த வத்சலா சி பிளாக்கில் வகுப்பறைகளை குளிர்விக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி இந்த முயற்சி என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் எதிர்மறை கருத்துக்களை குவித்து வருகிறது. வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே இதுகுறித்து பேசிய வத்சலா, “இது சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இது வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. ஆறு அறைகளில் இந்த பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் மாட்டு சாணம் அல்ல. மாட்டு சாணம், மண், சிவப்பு மணல், ஜிப்சம் பவுடர் மற்றும் முல்தானி மண் ஆகியவற்றைக் கலந்து இந்த பேஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனுடன், அறையின் வெப்பநிலையை அளவிடுவதற்கான உபகரணங்களும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools