Tamilவிளையாட்டு

வெட்ஸ் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். டேவிட் வார்னர் 14, கீரின் 14, மிட்செல் மார்ஸ் 3, மெக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 0 என ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ஆரோன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஞ்ச் 58 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 4 ரன்னில் போல்ட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை காட்ரேல் வீசினார். முதல் பந்தில் வேட் பவுண்டரி விளாச இன்னும் 5 பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அடுத்த பந்தில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் வேட் 1 ரன் எடுத்தார். 4-பந்தில் மீண்டும் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. அதில் ஸ்டார்க் 2 ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.