வெங்கையா நாயுடுவின் ஆவண புத்தகம் நாளை வெளியாகிறது

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளில் நமது நாட்டில் 330 பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறார். 4 கண்டங்களில் உள்ள 19 நாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

பனாமா, கவுதிமாலா, கோஸ்டரிக்கா, மால்டா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த முதல் இந்திய துணை ஜனாதிபதி என்ற பெருமை அவருக்கு உண்டு. மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

61 பட்டமளிப்பு விழாக்களில் உரை நிகழ்த்தி இருக்கிறார். 25 சிறப்பு சொற்பொழிவு ஆற்றி உள்ளார். மாணவ-மாணவிகளுடன் 35 நிகழ்ச்சிகளில் கலந்துரையாடி இருக்கிறார். பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு 97 முறை வருகை புரிந்துள்ளார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த இப்பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிடுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன், முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே.பராசரன், ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், இந்திய பேட்மிண்டன் குழுவின் தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: south news