வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலையும் உயர்கிறது!
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
விலையை குறைக்க பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. துருக்கி, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்திருந்தாலும் வெங்காயத்தின் விலை அதிகமாகவே இருக்கிறது. தலைநகர் டெல்லியில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் தற்போது உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயரத்தொடங்கி உள்ளது.
டெல்லி ஆசாத்பூர் மொத்த விற்பனைச் சந்தையில் நேற்று உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.32 ஆக உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உருளை கிலோ ரூ.18-க்கு மட்டுமே விற்பனை ஆனது. கடந்த மாதம் கிலோ ரூ.25 ஆக அதிகரித்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உருளைக்கிழங்கு விலை தற்போது 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பொதுமக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சில்லரை கடைகளில் உருளை கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உருளை விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு பரேலியில் இருந்து உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதம் சராசரியாக 355 டன் உருளை வந்த நிலையில் நேற்று 1284 டன் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் உருளைக்கிழங்கு விலை குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியை போல கொல்கத்தாவிலும் உருளை விலை கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்ந்து விற்பனையாகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உருளை கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த மாதம் 18-ந்தேதி கிலோ ரூ.20 ஆக உயர்ந்த நிலையில் நேற்று ரூ.24-க்கு விற்பனையானது.
மும்பையிலும் உருளை விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. அங்கு தற்போது கிலோ ரூ.32-க்கு விற்பனையாகிறது.