வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக வெங்காய விலை உயர்வு குறித்து, முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள நுகர்பொருள் வழங்கல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெங்காய விலை உயர்வினை கட்டுப்படுத்தும் பொருட்டு மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதியில் உள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தினை கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் புறப்பட்டு சென்றுள்ளனர்.

நாசிக் பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தினை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகள் மூலமாக தற்காலிக வெங்காய விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அமைச்சர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news