சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளதாம்.
மேலும் இது மங்காத்தா பட பாணியில் ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சுதீப் ஏற்கனவே தமிழில் ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’, விஜய்க்கு வில்லனாக ‘புலி’ போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.