கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.
வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து கீழ் அணையில் தேக்கப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரியில் சேமிக்கப்படும். கடந்த ஆகஸ்டு மாதம் பலத்த மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பின்னர் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. பின்னர் கீழ் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தற்போது கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. நேற்று 43.30 அடி தண்ணீர் இருந்தது. இன்று 43.6 அடியாக குறைந்துள்ளது. சென்னைக்கு நேற்று 40 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரியின் நீர்மட்டம் 39 அடி இருக்கும் வரை சென்னைக்கு குடிநீர் அனுப்பமுடியும். தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏரியில் இருக்கும் தண்ணீரும் வேகமாக குறைந்து வருகிறது.
இந்த நிலைநீடித்தால் இன்னும் 10 நாட்கள் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்பமுடியும். ஏரிக்கு நீர் ஆதாரமாக இருக்கும் 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையும் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்தால் மட்டுமே கீழ்அணையில் இருந்து வடவாறு வழியாக வீராணத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு சென்னைக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் அனுப்பிவைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை வீராணம் ஏரி தீர்த்து வைத்து வருகிறது. தற்போது வீராணம் ஏரியின் நீரும் குறைந்து வருவதால் சென்னை பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.