72-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது.
தேசியக்கொடி ஏற்ற வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். பின்னர் இன்று காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின் முப்படை வீரர்கள், காவல் துறையினர் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பை தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். வனயானைகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்ததற்காக கால்நடை மருத்துவர் பிரகாஷ், மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்றியதற்காக ராணிப்பேட்டை ஆசிரியை முல்லை, பனியிலும் சிறப்பாக ரெயிலை செலுத்தியதற்காக மதுரை ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் முதல்வரிடம் இருந்து அண்ணா பதக்கத்தை பெற்றனர்.