Tamilசெய்திகள்

வீட்டு வேலை செய்வோரின் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள மத்திய அரசு

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இவர்களைப்பற்றிய எந்தவொரு கணக்கெடுப்பும் இதுவரை நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வீட்டு வேலை செய்வோர் குறித்து டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பு ஒன்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘சாதாரண மக்களுக்காக மத்திய அரசு தனது கொள்கைகளை உருவாக்குகிறது. எனவே நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய அரசு விரும்புகிறது’ என்று தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 742 மாவட்டங்களில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பு மூலம் இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலை குறித்து அரசு அறிய முடியும் என பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.