Tamilசெய்திகள்

வீட்டில் இருக்கும் போதும் முக கவசம் அணிய வேண்டும் – மத்திய அரசு அறிவுரை

கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் வகையில், மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:-

நாம் இதுவரை வீட்டுக்கு வெளியே செல்லும்போது முக கவசம் அணிவதைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். ஆனால், தொற்று பரவும் விதத்தை பார்த்தால், வீட்டில் இருக்கும்போதும் முக கவசம் அணிவது நல்லது.

வீட்டில் மற்றொருவருடன் அமர்ந்திருக்கும்போது முக கவசம் அணிய வேண்டும். அதிலும், வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்து விட்டால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அவர் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். வீட்டில் அவர் தனியறையில் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள மற்றவர்களும் முக கவசம் அணிய வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இல்லாவிட்டால், கொரோனா பராமரிப்பு மையங்கள் எனப்படும் தனிமை முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது மட்டுமே ஒரே வழிமுறை அல்ல. ஆஸ்பத்திரி படுக்கைகள், தேவைப்படுபவர்களுக்குத்தான் பயன்பட வேண்டும்.

மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. விருந்தினர்களை வீட்டுக்கு வரவழைக்கக்கூடாது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியில் எந்தவிதத்திலும் தொய்வு ஏற்படக்கூடாது. தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் நோக்கத்தில், திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியதாவது:-

மக்களிடையே இப்போது தேவையற்ற பீதி காணப்படுகிறது. இதில் நன்மையை விட தீமையே அதிகம். கொரோனா தாக்கிய ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு இயல்பாக இருந்தாலும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரியில் சேருவதையே விரும்புகிறார்.

இதனால், ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே கூட்டமாக காணப்படுகிறது. உரிய சிகிச்சை கிடைக்காமல், தீவிர நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனாவை பொறுத்தவரை, 85 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்படும். காய்ச்சல் மருந்துகள் மூலமோ அல்லது சாதாரண ஜலதோஷத்தைப் போல் நீராவி பிடிப்பதன் மூலமோ குணமடைந்து விடலாம்.

அதுபோல், பீதியில் மருந்துகளை வீட்டில் பதுக்கி வைக்கக்கூடாது. இதனால், சந்தையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆஸ்பத்திரிகள், மருத்துவ ஆக்சிஜனை தவறாக பயன்படுத்தக்கூடாது. அதில் கசிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

‘ரெம்டெசிவிர்’ மருந்தின் பயன்கள், தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. அதை மந்திர சக்தியாக கருத வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.