Tamilசெய்திகள்

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி! – இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி

கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல் நடவடிக்கையாக, வீட்டிலேயே தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்து உள்ளது.

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில், பரிசோதனைகளை அதிகரிப்பதும் முக்கிய பணி ஆகும். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் சங்கிலி உடைபடும்.

எனவே பரிசோதனைக்கு மத்திய-மாநில அரசுகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன. எனவே நாள்தோறும் சுமார் 20 லட்சம் பரிசோதனைகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. இதற்காக அரசு மற்றும் தனியார் பரிசோதனைக்கூடங்கள் இரவு-பகலாக செயல்பட்டு வருகின்றன.

அதேநேரம் கொரோனா தொற்றை சுயமாக வீட்டிலேயே கண்டறிவதற்கான கருவி ஒன்றை புனேவை மையமாக கொண்டு செயல்படும் மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் லிட். நிறுவனம் தயாரித்து உள்ளது.

‘கோவிசெல்ப் கிட்’ எனப்படும் இந்த ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் (ஆர்.ஏ.டி.) கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த கருவியை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதன் விலை சுமார் ரூ.450 எனவும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த கருவியை யார்-எப்போது பயன்படுத்த முடியும்? என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு உள்ளது.

அது குறித்த விவரம் வருமாறு:-

கொரோனா அறிகுறி கொண்டவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் மட்டுமே இந்த கருவியை பயன்படுத்த வேண்டும்.

கண்மூடித்தனமான பரிசோதனைகள் கூடாது.

குறைவான தொற்று பாதிப்புகள் சில நேரங்களில் இந்த கருவியில் விடுபட நேரிடலாம். எனவே இந்த ஆர்.ஏ.டி. கருவி பரிசோதனையில் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்ற முடிவு வந்தாலும், அறிகுறி இருந்தால் உடனடியாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு வரும் வரை அறிகுறி கொண்டவர் கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒரு செல்போன் செயலியில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு ஏற்ப இந்த கருவிகளை பயன்படுத்தி வீட்டு பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த செயலி பரிசோதனைக்கான விரிவான வழிகாட்டி மட்டுமின்றி பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் முடிவை நோயாளிகளுக்கு வழங்கும். அத்துடன் இந்த பரிசோதனை முடிவடைந்தவுடன் அந்த செல்போனிலேயே பரிசோதிக்கப்பட்ட ‘ஸ்ட்ரிப்பை’ புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தரவுகள் அனைத்தும் ஐ.சி.எம்.ஆரின் பரிசோதனை தளத்துடன் இணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பான ‘சர்வரில்’ சேமிக்கப்படும்.

இவ்வாறு ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.

கொரோனாவை வீட்டிலேயே சுயமாக பரிசோதிக்கும் கருவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கும் விவகாரம் கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல் சாதனையாக பார்க்கப்படுகிறது.