சென்னையில் கொரோனா முதல் அலை தாக்கிய போது காய்ச்சல் பரிசோதனை முகாம் மற்றும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தல் போன்ற தடுப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் கைகொடுத்ததால் 2-வது அலை தாக்கத்தின்போதும் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் தொற்று பரவல் அதிகரிக்கப்படுவது தடுக்கப்பட்டது.
இதனால் இந்த பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த சில மாதங்களாக வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்ட இவர்கள் தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் மாநகராட்சி இந்த பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ‘செரோ சர்வே’ முடிவின் அடிப்படையில் மாநகராட்சி களப்பணியில் ஈடுபடுத்திய ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
30 முதல் 60 சதவீதம் பணியாளர்களை குறைத்துள்ளதாக மாநகராட்சி அலுவலக குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றிய 374 பேரில் இருந்து 211 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மணலியில் 270 பேர் தற்போது பணியாற்றுகிறார்கள். பாதிப்பு குறைந்த மண்டலங்களில் இந்த களப்பணியாளர்கள் அதிகளவு குறைக்கப்படுகிறார்கள். சென்னையில் தற்போது 160 முதல் 180 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தொற்று பரவல் குறைந்து வருகின்ற மண்டலங்களில் களப்பணியாளர்களை படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணியாளர்களுக்கு தினமும் ரூ.391 ஊதியம் என்ற அடிப்படையில் மாத இறுதியில் வழங்கப்படுகிறது.
மேலும் ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்ட செரோ சர்வே முடிவில் சென்னையில் நோய் எதிர்ப்பு சக்தி 78.2 சதவீதம் பேருக்கு இருப்பது தெரியவந்தது. பாதிப்பு அதிகமாக இருக்கும் ஒரு சில மண்டலங்களில் இந்த பணியாளர்கள் அதிகளவிலும், குறைந்த பாதிப்பு உள்ள மண்டலங்களில் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.