தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தி அறிவித்தன. 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோர் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வால் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒவ்வொருவரும் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. ஏ.சி. பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்தது.
மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு ‘ஷாக்’காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக பயன்பாடு, கடைகள் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்பட்ட படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அந்த பாதிப்பு இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இதுவரையில் 1-ஏ என்ற அடிப்படையில் முதல் 100 யூனிட்டுகளுக்கு இலவசமாக பொது பயன்பாட்டிற்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-டி யாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமான ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் 3 சமையல் அறை கொண்ட வீடுகள் இருந்தால் 3 மின் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக 4-வதாக உள்ள ஒரு மீட்டர் பொதுவான மின்விளக்கு, குடிநீருக்கான மோட்டார் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த மீட்டருக்கு இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது. அவற்றிற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணம் ரூ.200 வசூலிக்கப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தக்கூடிய மீட்டரை 100 யூனிட் உபயோகப்படுத்தி இருந்தால் ரூ.800 கட்டணமும் ரூ.200 நிலையான கட்டணமும் சேர்த்து ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இதுவரையில் பொதுவான பயன்பாட்டிற்கு பலர் தனி மின் மீட்டரை பயன்படுத்தி வந்தனர். வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் மோட்டார், பொதுவான மின் விளக்கிற்கு தனியாக கட்டணம் வசூலிக்க தனி மீட்டர் பயன்படுத்தி வந்தனர். மேலும் சொந்த குடியிருப்புகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவான பயன்பாட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இதனால் சாமான்ய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிலர் கூடுதலாக உள்ள இணைப்புகளை சரண்டர் செய்து வருகின்றனர். தற்போது மோட்டார், மின்விளக்கு, லிப்ட் ஆகியவற்றிற்கு கட்டணம் உயர்த்தியதால் பொதுவான பயன்பாடு உள்ள மின் இணைப்பை வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மீட்டருடன் இணைத்து வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் பொது பயன்பாடு மின்மீட்டர் சரண்டர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாத சம்பளத்தில் மின் கட்டணத்திற்கே பெரும் தொகை செலவிட வேண்டிய நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்கள் ஏ.சி. பயன்படுத்துவதை தவிர்த்தும், தேவையற்ற மின்சாதனங்களை குறைத்தும் வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘பொதுவான மின் உபயோக பயன்பாட்டிற்குரிய மீட்டர் எந்தெந்த வீடுகளில் உள்ளது என்பதை ஊழியர்கள் ஆய்வின் மூலம் கண்டு பிடித்து மாற்றி வருகின்றனர். அதிகளவு ஓடாமல் இருக்கும் மீட்டர், பொதுவான மோட்டார், படிக்கட்டு மின்விளக்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற இணைப்புகளை அலுவலகத்தில் இருந்தும் கண்டுபிடித்து புதிய டேரிப்பிற்கு மாற்றி வருகிறோம்’ என்றனர்.