X

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் – தீக்குளித்த பா.ம.க பிரமுகர் உயிரிழந்தார்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அங்கு குடியிருந்து வந்த பா.ம.க. பிரமுகர் கண்ணையன் தீக்குளித்தார். இதில் உடல் கருகிய நிலையில் அவர் உயிருக்கு போராடிய வீடியோ வெளியானது.  பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்ட கண்ணையனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணையன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பா.ம.க. பிரமுகர் தீக்குளித்து உயிரை விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் உயிரிழந்ததையடுத்து அவரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

அதேசமயம் கண்ணையன் இறந்ததையடுத்து கோவிந்தசாமி நகரில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், சாலையில் அமர்ந்து உணவு சமைத்தும் போராட்டம் நடத்துவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உயிரிழந்த பா.ம.க. பிரமுகருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.  இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர் அப்பகுதியில் செங்கல், மணல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.