வீடியோகான் அலுவலகத்தில் சிபிஐ சோதனை!
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த நிறுவனத்தில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் அதிக அளவில் முதலீடு செய்தார். இதற்கு பிரதிபலனாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்துக்கு 2012-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்கப்பட்டது.
இதன் மூலம் தீபக் கோச்சாரின் குடும்பம் பலன் அடைந்திருப்பதாகவும், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் எழுந்தது. அதன் பேரில் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. முதல்கட்டாக கடந்த ஆண்டு விசாரணை நடத்தியது. இந்நிலையில் 2 பேர் மீதும் சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது.
மேலும் மும்பை, அவுரங்காபாத்தில் உள்ள வீடியோகான் தலைமை அலுவலகங்கள், தீபக் கோச்சாரின் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது.