Tamilசெய்திகள்

வி்வசாயிகளுக்கு ஆதரவாக இன்று பாரத் பந்த் – தமிழகத்தில் போலீசார் குவிப்பு

3 வேளாண் சட்டங்களை கடும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

வடமாநிலங்களில் விவசாயிகள் அறிவித்திருக்கும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் என்பதால் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க முடியவில்லை என கேரளா மாநிலத்தில் ஆளும் அரசாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை வலுவாக நடத்திட முயற்சியெடுத்து வருகின்றன. அதேவேளை முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எந்த வகையிலும் முழு அடைப்பையொட்டி, பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதித்து விடக்கூடாது என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதேவேளை முழு அடைப்பையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்படுகின்றன என்றும், அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தொ.மு.ச. பொருளாளர் கி.நடராஜன் கூறுகையில், “தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி. உள்பட 16 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று பணிக்கு வரமாட்டார்கள். சூழ்நிலைக்கேற்ப இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபடுவார்கள்” என்றார்.

அதேவேளை போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படகூடாது என்பதில் போக்குவரத்து கழகம் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22 ஆயிரம் மாநகர பஸ்கள், அரசு விரைவு பஸ்கள், நகர பஸ்கள் என அனைத்து பஸ்களும் இன்று வழக்கம்போலவே இயங்கும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். விடுப்பில் இருப்போரும் உடனடியாக பணிக்கு திரும்ப அந்தந்த கிளை மேலாளர்கள் சார்பில் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

அதேவேளை இன்று பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், “தற்போது பகலில் சொற்பமான பஸ்களே இயக்கப்படுகின்றன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி இன்று பகலில் ஆம்னி பஸ்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிறகு தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் வழக்கமான பஸ்கள் சேவை இருக்கும்” என்றார்.

முழு அடைப்பு நடந்தாலும் ரெயில் போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றே தெரிகிறது. வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் இன்று வழக்கம்போலவே இயக்கப்படும். முழு அடைப்பையொட்டி பயணிகள் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் ரெயில் நிலைய வளாகங்களில் நிறுத்தப்பட இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பஸ், ரெயில்கள் சேவையில் பாதிப்பு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் விவசாயிகள் இன்று அறிவித்திருக்கும் முழு அடைப்புக்கு எதிர்க்கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இன்று கடைகள் வழக்கம்போலவே திறக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது.

முழு அடைப்புக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் இன்று பெருமளவில் ஆட்டோக்கள் இயங்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், “ஆட்டோ டிரைவர்களில் 80 சதவீதம் பேர் தொழிற்சங்கங்களில் இணைந்திருக்கிறார்கள்.

அந்தவகையில் இன்று ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடாது. இயக்கப்படும் சில ஆட்டோக்களும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்ப்பந்திக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது” என்றனர்.

தமிழகத்தில் முழு அடைப்பையொட்டி, பொதுமக்கள் நலனுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் போலீசார் உஷாராக இருக்கிறார்கள். ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

முழு அடைப்பையொட்டி, பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும், எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் போலீசார் முழு அக்கறையுடன் இருக்கிறார்கள். முழு அடைப்பையொட்டி வன்முறை சம்பவங்களில் யாரும் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடாதபடி கவனமாக இருக்கவேண்டும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும் முழு அடைப்பையொட்டி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாரும் ஈடுபட கூடாது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டி.ஜி.பி. திரிபாதி உத்தரவின் பேரில், முழு அடைப்பு காரணமாக நேற்று நள்ளிரவு முதலே தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் முழுமையான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை கமிஷனர் வழங்கினார். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, சென்னையில் முழுவீச்சில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் போராட்டத்தை திறமையாக எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிவுறுத்தல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் முக்கியமாக 3 விஷயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

முதலாவதாக, கொரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு போராட்டக்காரர்கள் போதுமான சமூக விலகலையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுகிறார்களா? என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும்

இரண்டாவதாக, நாட்டில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பை கடுமையாக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்கப்பட்டு இருக்கிறது.

மூன்றாவதாக, பாதுகாப்பு கடுமையாக்கப்படும் வேளையில் அமைதியை பராமரிப்பதிலும் கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.