விஷாலுக்கு எதிராக கமிஷ்னர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் புகார்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் இருவரும் விஷால் மீது இன்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி கே.ராஜனிடம் கேட்டபோது ‘தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் தலைவர் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். அவர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் தான் சங்க நிதி எட்டே முக்கால் கோடியை செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு அனுமதி இல்லாமல் சங்க நிதியை பயன்படுத்திய விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளையராஜா இசை நிகழ்ச்சியை அவர் நடத்தக்கூடாது என்றும் கூறி இருக்கிறோம். இசை நிகழ்ச்சி என்ற பெயரில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. அரசு தரப்பில் இருந்து ஒருவரை நியமித்து நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால் அதில் இருந்து திரட்டப்படும் நிதியை கொண்டு பழைய கணக்கை காட்டக்கூடாது’ என்று கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools