Tamilசெய்திகள்

விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொறுத்துவதை நிறுத்த வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுருத்தல்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2020-ம் ஆண்டு மின்சார சட்டமுன்வடிவு மத்திய அரசால் வெளியிடப்பட்ட போது, இந்த சட்டமுன்வடிவு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும், வீட்டு பயனீட்டாளர்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் நிறுத்தும் ஒரு முயற்சி என்று கூறி, அ.தி.மு.க. அரசை கண்டித்து விமர்சித்தவர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக இருக்கின்ற நிலையில், தி.மு.க. எதை எதிர்த்ததோ அது செயல்பாட்டிற்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கி பேசிய முதல்-அமைச்சர், சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கியதை ஒரு மிகப்பெரிய சாதனை போல சித்தரித்து, இது போன்ற அரசு இந்தியாவிலேயே இல்லை என்று பேசினார். ஆனால் இந்த புதிய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

இன்றைக்கு அந்த இணைப்புகளில் எல்லாம் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், இது மட்டுமல்லாமல், இது வரை மீட்டர் இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது குறித்து மின்சார வாரிய அதிகாரி தெரிவிக்கையில், விவசாயத்திற்கு இலவசமாக தொடர்ந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும், கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருத்தப்படவில்லை என்றும், எவ்வளவு மின் பயன்பாடு உள்ளது என்பதை அறியத்தான் என்றும் கூறி உள்ளார்.

இதைத்தானே அம்மாவும் சொன்னார்கள். அ.தி.மு.க. சொன்ன போது அதை விமர்சித்தவர்கள், இப்போது அதை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. செய்தால் அது ‘ரத்தம்’, தி.மு.க. மேற் கொண்டால் ‘தக்காளி சட்னி’ என்ற நகைச்சுவை தான் நினைவிற்கு வருகிறது.

மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது. இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்க எல்லா மின் இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், எதிர் காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு என்று இல்லாமல், விவசாயிகளின் அச்சத்தை நீக்கும் வகையில் மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு முதல்- அமைச்சரை அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.