X

விவசாய ஆழ்துளை கிணறுகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம்

சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைப்பாக்கம், மாகரல், கீழானூர் உள்பட சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதாவது தினம்தோறும் விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீரை தவிர்த்து மீதமுள்ள தண்ணீரை சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.

இதற்காக விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்கி வருகிறது. இதுபோன்று தினமும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அருகில் உள்ள மாகரல் நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

அங்கிருந்து அதிக திறன்கொண்ட மின்மோட்டார் மற்றும் ராட்சத குழாய்கள் மூலம் செங்குன்றம் மற்றும் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுவந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தண்ணீர் மட்டுமல்லாமல் மாகரல் நீரேற்று நிலையத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக 13 ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 15 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் செயல்பாடுகளை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், அதிகாரிகளுடன் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தண்ணீரின் அளவு, மாகரல் நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தற்போது கிடைத்து வரும் அதே அளவு தண்ணீர் குறைந்து விடாமல் பார்த்து கொள்ளுமாறும், தண்ணீர் சீராக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூடுதலாக தண்ணீரை பெற என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதும் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன்பின்பு, சென்னையை அடுத்த ரெட்டேரியில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகர பகுதியில் போதுமான அளவு குடிநீர் வழங்க நீர் ஆதாரத்தை அதிகரிக்க சென்னை குடிநீர் வாரியம் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 316 தனியார் திறந்த வெளி விவசாய கிணறுகள் மூலம் தினமும் 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் விலைக்கு வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவானூர், சிறுவானூர் கண்டிகை, புல்லரம்பாக்கம், காந்திநகர் மற்றும் மோவூர் ஆகிய இடங்களில் 200 விவசாய கிணறுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு நாளொன்றுக்கு 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.47 கோடி ஒதுக்கி உள்ளது. தாமரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆழ்துளை விவசாய கிணறுகளில் இருந்து தினமும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து வரும் நிலையில் அங்கிருந்து கூடுதலாக மேலும் 8 மில்லியன் லிட்டர் எடுப்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.

வண்டலூர் அருகே உள்ள செம்மனேஞ்சேரி கல்குவாரி, பரங்கிமலை கலையஞ்சேரி கல்குவாரி ஆகியவற்றில் உள்ள தண்ணீரை எடுத்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அங்குள்ள தண்ணீரை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். சோதனை முடிந்த பின்னர் அதில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுப்போம்.

2017-ம் ஆண்டு சென்னைக்கு தினமும் 450 மில்லியன் லிட்டர் வழங்கப்பட்டது. தற்போது 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. பல்வேறு நேரங்களில் இதுபோன்ற அளவு தான் சென்னை நகருக்கு தண்ணீர் வினியோகம் செய்துள்ளோம். சென்னையில் மழை பெய்து 190 நாட்கள் ஆகி விட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதன்காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பா.பெஞ்சமின், உள்ளாட்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிஹரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.