புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், வடகாடு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மொய்விருந்து களை கட்டி வருகிறது. நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்கள் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு தனி நபரின் மொய் வசூல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வசூலானது. ஆனால் இந்த ஆண்டு கஜா புயலின் பாதிப்பால் மொய் விருந்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் அளவைவிட மிக குறைவான தொகையே வசூலாகிறது என்கிறார்கள் விருந்து நடத்தும் நபர்கள்.
கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, குளமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த மாதத்தில் இருந்து மொய்விருந்துகள் தொடங்கி நடந்து வருகிறது. அதே போல வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட கிராமங்களில் ஆடி மாதம் முதல் தொடங்கி ஒரு வாரமாக நடந்து வருகிறது. மொய் விருந்து நடைபெறும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி நேற்று பிரமாண்டமான அளவில் மொய் விருந்து நடத்தினார். இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, விருந்து வைக்கப்பட்டது. மொய் விருந்தில் பங்கேற்பவர்கள் வழங்கும் மொய்ப்பணத்தை எண்ணுவதற்காக தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் எந்திரங்களுடன் சேவை மையத்தை அமைத்திருந்தனர். சுமார் 20 இடங்களில் மொய் எழுதப்பட்டது. வசூல் செய்யப்பட்ட மொய் பணம் தனியார் வங்கி சேவை மையத்தில் எண்ணப்பட்டது. அதில் பல கள்ள நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மொய் எழுதிய இடங்களிலும், வங்கி சேவை மையத்தின் அருகிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு மைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த மொய் விருந்தையொட்டி, சுமார் 50 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. 200-க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு டன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சைவ உணவு தனியாக சமைத்து தனிப்பந்தலில் பரிமாறப்பட்டது. உணவு நேரத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகளை தவிர்த்துவிட்டு அனைவருக்கும் குவளையில் தண்ணீர் கொடுக்கப்பட்டது. உணவு சமைக்கவும், விருந்து பரிமாறவும் சுமார் 100 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த மொய் விருந்திற்காக மட்டும் ரூ.15 லட்சம் வரை கிருஷ்ணமூர்த்தி செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் மாலை விருந்து முடிந்த நிலையில் வசூல் செய்யப்பட்ட மொய் பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.4 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய்விருந்துகளில் தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் இது என்று கூறப்படுகிறது.
விருந்து சாப்பிட வந்தவர்கள் கூறுகையில், ‘கிருஷ்ணமூர்த்திக்கு அதிகபட்சமாக ரூ.7 கோடி வரை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மொய் வசூல் பாதியாக குறைந்துவிட்டது. மேலும் புயலில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கான வருமானம் முற்றிலும் முடங்கிவிட்டது. இதனால் கடன் வாங்கி கூட மொய் செய்ய வழியில்லை. அதனால் செய்த மொய்க்கு 4, 5 மடங்கு வரை அதிகமாக செய்ய முடியாமல், ஒரு மடங்கு மட்டும் செய்கிறோம். மொய் வசூலை நம்பி கடன் வாங்கியவர்கள் திரும்ப செலுத்துவதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது, என்றனர்.