X

விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் – பஞ்சாபில் கடைகள் மூடப்பட்டது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லி புறநகரில் சுழற்சி முறையில் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 121-வது நாளை எட்டியது. இந்தநிலையில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரும் கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. மற்ற மாநிலங்களில் முழு அடைப்பு நடத்தி போக்குவரத்தை தடை செய்வோம் என்று விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும் சம்குக்தா கிஷான் மோர்ச்சா என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

விவசாயிகள் அறிவித்தபடி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை 12 மணி நேரத்திற்கு முழு அடைப்பு போராட்டம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதன்காரணமாக பஞ்சாப், அரியானா உள்பட சில வட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக காணப்பட்டது. குறிப்பாக பஞ்சாபில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அரியானா, ராஜஸ்தானிலும் பல பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

பஞ்சாபில் ரெயில், பஸ் உள்பட வாகன போக்குவரத்து அனைத்தும் தடுக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி வட மாநிலங்களில் போக்குவரத்தில் எந்த இடையூறும் இல்லை.

டெல்லி புறநகரில் காசிப்பூர், திக்கிரி, சிங்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏற்கனவே முற்றுகையிட்டு இருந்தனர். இன்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களுக்கு வாகன போக்குவரத்தில் இடையூறு காணப்பட்டது.

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பஞ்சாப், அரியானாவில் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தடுப்புகளை ஏற்படுத்தி மறியல் செய்தனர். பதிண்தா, லுதியானா, அமிர்தசரஸ், பாட்டியாலா, மொகாலி, ரோதக், ஜார்ஜர் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் மிக கடுமையாக காணப்பட்டது.

ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் விவசாயிகள் அனுமதி கொடுத்தனர். அம்பாலா-டெல்லி இடையே பல இடங்களில் விவசாயிகள் மறியல் செய்தனர்.

சில இடங்களில் ரெயில் நிலையங்களிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளுக்கும், மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே இதுவரை 11 தடவை சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதன் காரணமாக விவசாயிகள் போராட்டம் காலவரையின்றி நீடித்தபடி உள்ளது.