சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய தண்ணீரை மாதந்தோறும் வழங்க வேண்டும். நீர் திறந்தால் தான் கூட்டத்தில் பங்கேற்பேன் என முதலமைச்சர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும்.
விவசாயிகள், மக்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு தான் பயன்படும். குறிப்பிட்ட காலம் வரை அணையில் இருந்து சரியான முறையில் தண்ணீர் திறக்க வேண்டும்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சிக்கிறது. நாங்குநேரி சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சாதி சண்டை போடுவது வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.